மணல் குவாரி வழக்கு; தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மணல் குவாரி வழக்கு; தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணலை அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இது தொடர்பாக 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை என்ஜினீயர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதே நேரம் விசாரணைக்கு தடைவிதிக்கவில்லை.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மனு கடந்த 23-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேலா எம் திரிவேதி, நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட கலெக்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் தாக்கல் செய்த மனு 'விசித்திரமானது' மற்றும் 'அசாதாரணமானது' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முன்னதாக வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story