சான் பிரான்சிஸ்கோ-மும்பை ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வர கூடிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வர கூடிய ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, விமான பயணிகளுக்கு மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யவோ அல்லது கட்டண தொகையை திருப்பி தரவோ தயார் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதுபற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், மேற்கூறிய சலுகை தவிர, பயணிகள் ஓட்டலில் தங்குவதற்கான அனைத்து செலவுகளையும், அவர்கள் விமானம் ஏறும் வரையிலான போக்குவரத்து செலவுகளையும் நாங்கள் தருவோம் என தெரிவித்து உள்ளார்.
அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணிக்க இருந்தனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. சமீபத்தில், டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி சென்ற ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் புறப்பட்டு சென்றபோது, திடீரென விமான என்ஜின்களில் ஒன்று பழுதடைந்தது.
இதனால், ரஷியாவின் மகதன் விமான நிலையம் நோக்கி விமானம் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன்பின் 2 நாட்கள் கழித்து மாற்று விமானம் உதவியுடன் விமான பயணிகள் அனைவரும் ரஷியாவில் இருந்து, சான் பிரான்சிஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.