ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம்; சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் சமீர் வான்கடே மனு


ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம்;  சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் சமீர் வான்கடே மனு
x

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் சமீர் வான்கடே மனு தாக்கல் செய்து உள்ளார்.

மும்பை,

மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சோதனை நடத்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி போதை பொருள் வழக்கில் கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் 3 வாரங்களுக்கு பிறகு போதை ஆதாரங்கள் இல்லையென ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஆர்யன் கானை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக முன்னாள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக சமீர் வான்கடேக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கடந்த புதன்கிழமை டெல்லி ஐகோர்ட்டு சமீர்வான்கடே மீது நடவடிக்கை எடுக்க 5 நாட்களுக்கு சி.பி.ஐ.க்கு தடைவிதித்தது. மேலும் சி.பி.ஐ. வழக்கிற்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் சமீர் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சி.பி.ஐ. கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆர்யன்கானை கைது செய்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் மனுவில் சமீர் வான்கடே கூறியுள்ளார்.


Next Story