சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? - ரெயில்வே மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? - ரெயில்வே மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
x

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

லக்னோ,

குஜராத் மாநிலம் அகமதாபாத் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி இடையே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி புறப்பட்டது.

ரெயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே கோவிந்த்புரி பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. ரெயிலின் 20 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சபர்மதி ரெயில் விபத்து சதி வேலையா? என சந்தேகம் எழுந்துள்ளது. தண்டவாளத்தில் வைக்கப்பட மர்ம பொருள் மீது ரெயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் எக்ஸ் வெளியிட்ட பதிவில், வாரணாசி அகமதாபாத் இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் மீது மோதி தடம்புரண்டது. இச்சம்பவம் கான்பூர் அருகே அதிகாலை 2.35 மணிக்கு நடைபெற்றுள்ளது. ரெயில் மோதிய பொருள் தொடர்பான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் போலீசார், உளவுத்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை' என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விபத்துக்குள்ளான ரெயில் அருகே வெளிநாட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பொருள் மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று ரெயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். தண்டவாளத்தில் மர்ம நபர்கள் இந்த பொருளை வைத்து சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மர்ம நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதற்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story