சமூக வலைதளம் மூலம் திருமணமான பெண்களை வசீகரித்து உல்லாசம்: கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


சமூக வலைதளம் மூலம்  திருமணமான பெண்களை வசீகரித்து உல்லாசம்: கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
x

சமூக வலைதளம் மூலம் திருமணமான பெண்களை வசீகரித்து உல்லாசம் அனுபவித்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு எச்.எஸ்.ஆர். படாவனே பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராம், முகநூல்(பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அவர் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து வந்தார்.

இந்த நிலையில் இவருக்கு சமூக வலைதளம் மூலம் வாலிபர் ஒருவர் பழக்கம் ஆனார். முதலில் சமூக வலைதளம் மூலம் பேசி வந்த இருவரும், பின்னர் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். அப்போது அந்த பெண்ணை, அந்த வாலிபர் காதல் வலையில் வீழ்த்தினார்.

அந்த பெண்ணும் தனக்கு திருமணமாகி பிள்ளைகள் இருப்பதை மறந்து வாலிபரின் காதலை ஏற்றுக் கொண்டார். பின்னர் அந்த வாலிபருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார். மேலும் வாலிபர் கேட்ட போதெல்லாம் அந்த பெண் பணம் கொடுத்து வந்தார். இதுவரையில் அவர் பல லட்சம் ரூபாய் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணை, அந்த வாலிபர் அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்தார். அந்த பெண் தனது குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறி மறுத்தபோது அந்த வாலிபர் மிரட்ட தொடங்கினார். மேலும் உல்லாசமாக இருந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் அந்த வாலிபர் உல்லாச காட்சிகளை வீடியோ எடுத்து வைத்திருந்தார்.

அதை அந்த பெண்ணுக்கு அனுப்பி பல லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார். பணம் தரவில்லை என்றால் உல்லாசத்துக்கு வர வேண்டும் என்றும், இல்லையேல் உல்லாச வீடியோவை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் என்றும் கூறி அந்த பெண்ணை வாலிபர் மிரட்டினார். இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த அந்த பெண் இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் அந்த பெண்ணையே, அந்த வாலிபருடன் போலீசார் பேச வைத்தனர். அப்போது அந்த வாலிபர், சென்னைக்கு வரும்படி அந்த பெண்ணை அழைத்தார். மேலும் தான் தங்கி இருக்கும் முகவரியையும் அந்த பெண்ணுக்கு வாலிபர் அனுப்பினார். அதன் அடிப்படையில் சென்னைக்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அதாவது அந்த வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பைசல்(வயது 26) என்பதும், கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் பெங்களூருவில் தனியாக அறை எடுத்து தங்கி ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் இதுபோல் ஏராளமான திருமணமான பெண்களை சமூக வலைதளம் மூலம் வசீகரித்து காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து, வீடியோ எடுத்து பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story