ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேச்சு; ராகுல் காந்தி மீது அவதூறு புகார்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஹரித்துவார்,
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கி நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்த இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, கடந்த ஜனவரி 9-ந்தேதி அரியானாவின் ஹரித்துவார் பகுதியில் ராகுல் காந்தி பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் கூறும்போது, 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் காக்கி அரை கால் சட்டைகளை அணிந்து கொண்டு, இந்து பள்ளிகளை நடத்தி கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் 2 முதல் 3 பணக்காரர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் ஒருவர் ஹரித்துவார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் கமல் பதாரியாவின் வழக்கறிஞரான அருண் பதாரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை 21-ம் நூற்றாண்டின் கவுரவர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
அவரது அநாகரீக பேச்சு அவரது மனநிலையை எடுத்து காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, நாட்டில் எப்போது எல்லாம் பேரிடர் ஏற்படுகிறதோ, அப்போது உதவி செய்ய முன்வரும் ஓர் அமைப்பாகும் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக ராகுல் காந்தி அநாகரீக முறையில் பேசியதற்காக, பிரிவு 499 மற்றும் 500-ன் கீழ் எனது கட்சிக்காரர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என தெரிவித்து உள்ளார்.
இதன்படி நீதிபதி சிவசிங், வழக்கு தாக்கல் செய்த நபர் வருகிற 12-ந்தேதி முன்பே விசாரணைக்கு ஆஜராகி வழக்கை பதிவு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளார். பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது.
நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம் கடைப்பிடிப்பது, கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வது என தொடர்ச்சியாக அக்கட்சியினர் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ள சூழலில், அவருக்கு எதிராக மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்து உள்ளது.