நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1¾ கோடி தங்கம் கொள்ளை
பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1¾ கோடி தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1¾ கோடி தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நகைக்கடை உரிமையாளர்
பெங்களூரு பின்னிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ் ஜெயின். இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜ் ஜெயின், தனது கடையில் இருந்து 3¾ கிலோ தங்க நகைகளை ஒரு பையில் எடுத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். அவர் தனது உறவினர் மகன் ஒருவரையும் தன்னுடன் அழைத்து சென்றார்.
இருவரும் மோட்டார் சைக்கிளில் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதையடுத்து ராஜ் ஜெயின், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார்.
தங்க நகைகள் கொள்ளை
எனினும் மர்மநபர்கள் அவரை விடாமல் துரத்தி சென்றனர். இந்த நிலையில், மேம்பாலத்தின் ஒரு பகுதியில் ராஜ் ஜெயின் உள்பட 2 பேரையும் வழிமறித்தனர். பின்னர் அவர்கள், ராஜ் ஜெயினை மிரட்டி அவர் வைத்திருந்த நகைகள் இருந்த பையை கொள்ளையடித்துவிட்டு கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்த சமயத்தில், அந்த வழியாக யாரும் வரவில்லை.
இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ராஜ் ஜெயின், உடனடியாக காட்டன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ராஜ் ஜெயின், தங்க நகைகளை கொண்டு வருவதை அறிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ரூ.1.70 கோடி
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்த மர்மநபர்கள், திட்டமிட்டு அந்தப்பகுதியில் ராஜ் ஜெயின் வந்தபோது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. எனினும், போலீசார் மேம்பாலத்தின் ஆரம்ப பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து 3¾ கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், அவற்றின் மதிப்பு ரூ.1.70 கோடி என்றும் போலீசார் கூறினார்.
2 தனிப்படை அமைப்பு
இந்த சம்பவம் குறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். நகைக்கடை உரிமையாளரை மிரட்டி ரூ.1.70 கோடி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.