காங்கிரஸ் எம்.பி.யிடம் குருதட்சணை கேட்ட மாநிலங்களவை தலைவர்: சபையில் பலத்த சிரிப்பலை


காங்கிரஸ் எம்.பி.யிடம் குருதட்சணை கேட்ட மாநிலங்களவை தலைவர்: சபையில் பலத்த சிரிப்பலை
x
தினத்தந்தி 5 Aug 2023 9:27 AM IST (Updated: 5 Aug 2023 10:28 AM IST)
t-max-icont-min-icon

சபை கூடியவுடன் அவர்களுக்கு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்.

புதுடெல்லி,

மழைக்கால கூட்டத்தொடரின் பெரும்பாலான நாட்களில் பலத்த அமளியை கண்ட மாநிலங்களவையில் நேற்று சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது.

ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. வெங்கடரமண ராவ் மோபிதேவி, காங்கிரஸ் எம்.பி. பிரதாப்காரி ஆகியோருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி, சபை கூடியவுடன் அவர்களுக்கு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்.அப்போது, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் போட்டி போட்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தன. உடனே ஜெகதீப் தன்கர், ''பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவிக்கக்கூட முடியாத அளவுக்கு சபையை நடத்துவது ஆரோக்கியமானது அல்ல'' என்று கூறினார்.அதையடுத்து, அமளி நின்றது. 3 எம்.பி.க்களுக்கும் சபை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.

அப்போது, ஜெகதீப் தன்கர், சபையில் இருந்த காங்கிரஸ் எம்.பி. பூபேந்தர்சிங் ஹூடாவை சுட்டிக்காட்டி, ''ஹூடாவுக்கு நான் கல்லூரியில் பாதுகாவலராக இருந்தவன். அதனால் அவர் எனக்கு 'குருதட்சணை' அளிக்க வேண்டும். அந்த குருதட்சணையை மனோஜ் ஜா எம்.பி.க்கு என் சார்பில் பிறந்தநாள் பரிசாக ஹூடா தனது சொந்த செலவில் வாங்கித்தர வேண்டும். அவர் வாங்கித்தருவதை ஆம் ஆத்மி எம்.பி. சுஷில்குமார் குப்தார் சரிபார்க்க வேண்டும்'' என்று கூறினார்.

அவரது நகைச்சுவையை கேட்டு சபையில் பலத்த சிரிப்பலை எழுந்தது. எம்.பி.க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.


Next Story