ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் ரூ.6 லட்சம் தங்க நகைகள் திருட்டு


ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் ரூ.6 லட்சம் தங்க நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் ரூ.6 லட்சம் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரு:

ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு

சென்னையை சேர்ந்தவர் அமுல் குட்டி (வயது 45). இவர் தனது உறவினரான மகேஷ்குமார் மற்றும் மகேஷ்குமாரின் மனைவி ஆகியோருடன் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி மும்பையில் இருந்து மங்களூரு நோக்கி ரெயிலில் வந்தார். இந்த நிலையில் அந்த ரெயில் உடுப்பி மாவட்டம் பைந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அமுல் குட்டி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அவரது கைப்பையை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனா்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் அமுல் குட்டி எழுந்து பார்த்தபோது, தனது கைப்பை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கைப்பையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வைத்திருந்தார். இதனால் யாரோ மர்மநபர்கள் நகைகள் இருந்த பையை திருடி சென்றது தெரியவந்தது.

பைந்தூர் போலீசுக்கு மாற்றம்

இதுதொடர்பாக உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரெயில் மங்களூருவுக்கு வந்ததும் ரெயில்வே போலீசில் அமுல்குட்டியும், டிக்கெட் பரிசோதகரும் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில், ரெயிலின் கழிவறையில் குப்பை தொட்டியில் அவரது கைப்பை கிடந்தது. அதில் ஒரு செல்போன் மற்றும் ஆதார் அட்டை ஆகியவை இருந்தது. ஆனால் நகைகள் இல்லை.

இதனால் மர்மநபர்கள் நகைகளை திருடிவிட்டு கைபையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால், மங்களூரு ரெயில்வே போலீசார், இந்த வழக்கை பைந்தூர் போலீசுக்கு மாற்றினர்.

ரெயில்வே மேலாளர் எச்சரிக்கை

இதுகுறித்து அமுல்குட்டியும் பைந்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை இருந்த கைப்பை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொங்கன் ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரெயிலில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதாகவும், பயணிகள் உடைமைகளையும், அணிந்திருக்கும் தங்க நகைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கொங்கன் ரெயில்வே மேலாளர் நிக்காம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story