முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 ஆண்டுகளில் வழங்கிய பென்சன் தொகை ரூ.5.56 லட்சம் கோடி: அரசு தகவல்


முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 ஆண்டுகளில் வழங்கிய பென்சன் தொகை ரூ.5.56 லட்சம் கோடி:  அரசு தகவல்
x

நாடு முழுவதும் முன்னாள் ராணுவ வீரர்கள் 32 லட்சத்து 48 ஆயிரத்து 285 பேர் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.



புதுடெல்லி,


நாடாளுமன்ற மக்களவையில், நாட்டில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் (பென்சன் தொகை) உள்ளிட்ட விவரங்களை பற்றி அரசு தெரிவிக்கும்படி பல்வேறு எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வ முறையில் அளித்து உள்ள பதிலில், நாடு முழுவதும் முன்னாள் ராணுவ வீரர்கள் 32 லட்சத்து 48 ஆயிரத்து 285 பேர் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இவற்றில் உத்தர பிரதேசம் (4 லட்சத்து 23 ஆயிரத்து 667 பேர்) முதல் இடத்தில் உள்ளது. மராட்டியம் (2,92,691 பேர்) 2-வது இடத்திலும், பஞ்சாப் (2,71,595 பேர்) 3-வது இடத்திலும் உள்ளன.

ராணுவம், விமான படை மற்றும் கடற்படை என ஒட்டு மொத்த முப்படைகளுக்கும் 2017-ம் ஆண்டில் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற ஓய்வுக்கான பலன்கள் என்ற வகையில் அரசு ரூ.91,999.58 கோடியை செலவழித்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதன்படி, 2018-ம் ஆண்டில் ரூ.1,01,774 கோடி, 2019-ம் ஆண்டில் ரூ.1,17,810 கோடி, 2020-ம் ஆண்டில் ரூ.1,28,066 கோடி, 2021-ம் ஆண்டில் ரூ.1,16,873 கோடி என்ற அளவில் உள்ளது.

2023-24-ம் ஆண்டிற்கு பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது முந்தின ஆண்டை விட 13 சதவீதம் அதிகம் ஆகும். இவற்றில் ரூ.1.38 லட்சம் கோடி பாதுகாப்பு துறைக்கான ஓய்வூதிய தொகைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story