பெங்களூருவில் தொடரும் வருமான வரி சோதனை; கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.45 கோடி சிக்கியது
பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகளின் தொடரும் வேட்டையாக கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.45 கோடி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி.க்கு சொந்தமானதா? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முகாமிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நகைக்கடைகள், தொழில்அதிபர்கள், காண்டிராக்டர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்களுக்கான ஒப்பந்த பணிகளுக்கான பாக்கி தொகையை அரசு விடுவித்த பின்பு அதிகாரிகள் இந்த சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த 12-ந்தேதி மாலையில் பெங்களூரு ஆர்.டிநகர், சுல்தான் பாளையா, மான்யதா டெக் பார்க்கில் உள்ள அரசு காண்டிராக்டரும், அரசு ஒப்பந்ததாரர் சங்க துணை தலைவருமான அம்பிகாபதியின் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவரது மகனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.42 கோடி சிக்கி இருந்தது. இந்த நிலையில், மற்றொரு கட்டிட காண்டிராக்டர் வீட்டில் நடந்த சோதனையிலும் ரூ.45 கோடி சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூருவில் கட்டிட காண்டிராக்டராக இருந்து வருபவர் சந்தோஷ் கிருஷ்ணப்பா. இவர், ராஜாஜிநகர் அருகே கியாதமாரனஹள்ளியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். காண்டிராக்டர் சந்தோஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தோசுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். முதலில் குறைந்த அளவிலான அதிகாரிகளே சந்தோஷ் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த சோதனையின் போது நேற்று முன்தினம் இரவில் 5-வது மாடியில் உள்ள பிளாட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதாவது டிரங்க் பெட்டிகள், பைகள் உள்ளிட்டவற்றுக்குள் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சந்தோசின் வீட்டில் சிக்கிய ஆவணங்களை பரிசீலனை நடத்தினார்கள். அவரது வீட்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணத்தை எண்ணும் பணியை தொடங்கினார்கள். அப்போது ஒட்டு மொத்தமாக ரூ.45 கோடி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ரூ.45 கோடிக்கு உரிய ஆவணங்கள் குறித்து சந்தோசிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக அந்த பணம் யாருக்கு உரியது, எதற்காக இவ்வளவு பெரிய தொகையை வீட்டில் பதுக்கி வைத்துள்ளீர்கள், அந்த பணத்தை யாருக்கு கொடுக்க வைத்திருந்தீர்கள், இந்த பணத்திற்கு பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்பது குறித்து சந்தோசிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தனது வீட்டில் சிக்கிய பணம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகரும், முன்னாள் எம்.எல்.சி.(மேல்-சபை உறுப்பினர்) காந்தராஜிக்கு சொந்தமானது என்று அதிகாரிகளிடம் சந்தோஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காந்தராஜின் சகோதரர் எனக்கூறப்படும் நபரை சந்தோசின் வீட்டுக்கு அழைத்து வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
ஆனால் அவர் தனக்கும், அந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் வீட்டில் வேறு ஏதாவது பணம், ஆவணங்கள் உள்ளதா? என நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பின்னர் சந்தோஷ் வீட்டில் சிக்கிய ரூ.45 கோடியையும், 30-க்கும் மேற்பட்ட பைகளில் வைத்து கொண்டு 3 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். சந்தோஷ் வீட்டில் சிக்கிய சில ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் ரூ.45 கோடி குறித்து உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும், விசாரணைக்கு ஆஜராகும்படியும் கூறி வருமான வரித்துறை அதிகாரிகள், காண்டிராக்டர் சந்தோசுக்கு நோட்டீசு கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய பணம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி.க்கு சொந்தமானதா? அல்லது வேறு யாருக்கும் சேர்ந்ததா? என்பது தெரியவில்லை. அது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.45 கோடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் வசித்து வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.சி. காந்தராஜ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
காண்டிராக்டர் சந்தோஷ் யாரென்றே எனக்கு தெரியாது. அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவரது வீட்டில் சிக்கிய பணத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதற்காக காண்டிராக்டர் சந்தோஷ் தனது வீட்டில் சிக்கிய பணம், எனக்கு(காந்தராஜ்) சொந்தமானது என்று கூறினார் என்பதும் தெரியவில்லை. உண்மையில் சந்தோசை நான் இதற்கு முன்பு சந்தித்தது கூட இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய பணம் என்னுடையது இல்லை.
இந்த விவகாரம் தொடர்பாக எனது வீட்டில் சோதனையும் நடைபெறவில்லை. நெலமங்களாவில் உள்ள வீட்டில் தான் (நேற்று முன்தினம்) இருந்து வருகிறேன். எனது வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வரவும் இல்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசும் அனுப்பவில்லை. அதுபோன்று வெளியாகும் தகவல் எதுவும் உண்மை இல்லை. எனக்கு சகோதரர் கூட கிடையாது. அப்படி இருக்கையில் எனது சகோதரரை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரித்ததாக கூறுவதும் உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.
2 வாரத்தில் ரூ.93 கோடி சிக்கியது
பெங்களூருவில் கடந்த 2 வாரமாக முகாமிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தொழில்அதிபர், நகைக்கடை அதிபர்கள், அரசு காண்டிராக்டர்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரத்தில் பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், இதுவரை ரூ.93 கோடி வரை சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அம்பிகாபதியின் வீட்டில் ரூ.40 கோடியும், சந்தோஷ் வீட்டில் ரூ.45 கோடியும், உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வரும் உரிமையாளர் வீட்டில் ரூ.8 கோடி சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் நகைக்கடை அதிபர்கள் செய்த வரி ஏய்ப்பு குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.