செல்போன் விற்று வசூலித்த ரூ.3 லட்சம் கையாடல்


செல்போன் விற்று வசூலித்த ரூ.3 லட்சம் கையாடல்
x

‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ செல்போன் கடையில் வேலை பார்த்த ஊழியர்களே வசூலான ரூ.3 லட்சத்தை திட்டமிட்டு திருடிய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேடராயனபுரா:-

செல்போன் கடை

பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் அபுபக்கர் ஆவார். இவரது கடையில் அப்துல் சகாப் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வழக்கம்போல் அந்த பகுதியில் உள்ள செல்போன் கடைகளுக்கு சென்று, செல்போன் விற்பனை செய்த ரூ.3 லட்சத்தை வசூலித்தனர். பின்னர் அவர்கள் கடைக்கு புறப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் 2 பேர் அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் கஞ்சா கடத்துகிறீர்களா? என கேட்டு அப்துல் சகாப் மற்று அஜித் ஆகியோரை மிரட்டினர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறித்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும், கடையின் உரிமையாளர் அபுபக்கரிடம் கூறினர். உடனே அவர் இதுதொடர்பாக பேடராயனபுரா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கடையில் வேலை செய்த 2 பேர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தான் திட்டமிட்டு பணத்தை மோசடி செய்தது தெரிந்தது. அவர்கள் 2 பேரும் வழக்கம்போல் கடைகளுக்கு சென்று பணத்தை வசூலித்து உள்ளனர். பின்னர் அவர்கள், தங்களது நண்பர்கள் 2 பேரை அழைத்து பணத்தை மோசடி செய்வது குறித்து பேசி உள்ளனர்.

அப்போது போலீஸ் போல் நடித்து தங்களிடம் இருந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு கூறி உள்ளனர். இந்த நிலையில் அவர்களது கூட்டாளிகள் திட்டமிட்டபடி பணத்தை பறித்துவிட்டு சென்றனர். அதையடுத்து அவர்கள் பணம் திருடு போனதாக நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் அவர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். 'வேலியே பயிரை மேய்ந்த கதையாக' செல்போன் கடையில் வேலை பார்த்த ஊழியர்களே வசூலான பணத்தை திட்டமிட்டு திருடிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story