தொழில் அதிபரிடம் ரூ.3 லட்சம் நூதன மோசடி; 3 பேர் அதிரடி கைது
உடுப்பியில் தொழில் அதிபரிடம் ரூ.3 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பெங்களூரு;
உடுப்பி மாவட்டம் மந்தார்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் யூரோ பாண்ட் நிறுவனத்தின் ஏஜெண்டாகவும் இருந்து வருகிறார். கடந்த 4-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் தொடர்பு கொண்டு பேசியவர் தான் யூரோ பாண்ட் நிறுவனத்தின் அதிகாரி என்று மந்தார்த்தி தொழில் அதிபரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
மேலும் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை, அவனை ஹெலிகாப்டர் ஆம்புலன்சில் மங்களூருவுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க ரூ.3 லட்சம் தேவைப்படுகிறது, அதை தந்து உதவினால் சில மாதங்கள் கழித்து கொடுத்து விடுவதாக கூறினார். அதை நம்பிய உடுப்பி தொழில் அதிபர் ரூ.3 லட்சத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் யூரோ பாண்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போதுதான் அவரை மர்ம நபர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் உடுப்பி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உடுப்பி தொழில் அதிபரிடம் மோசடியில் ஈடுபட்டது மராட்டியத்தில் வசித்து வரும் 3 பேர் என்பதும், அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்தபடி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உடுப்பி போலீசார் மராட்டியத்துக்கு சென்று 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை உடுப்பிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.