விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர் - சரியான நேரத்தில் காப்பாற்றிய ரெயில்வே காவலர்
ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபில் தனது உயிரை பணயம் வைத்து தற்கொலைக்கு முயன்ற நபரை தண்டவாளத்தில் இருந்து நகர்த்தி காப்பாற்றினார்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ரோடு ரெயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.35 மணிக்கு, கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபில் டி.எஸ்.கிரி, தனது உயிரை பணயம் வைத்து அந்த நபரை சரியான நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து நகர்த்தி காப்பாற்றினார். இதையடுத்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு, அந்த நபரின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்தனர். பின்னர் அந்த நபர் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் செயல்பட்டு தற்கொலையை தடுத்த ரெயில்வே காவலரை அதிகாரிகள் பாராட்டினர்.