அரசின் தலைமை செயலாளரிடம் பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் புகார்


பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அரசின் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளனர். கர்நாடகத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு:

பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அரசின் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளனர். கர்நாடகத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெண் அதிகாரிகள் மோதல்

கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா, கர்நாடக கைத்தறி வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.அதுபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகிணி சிந்தூரி, கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் ரோகிணி சிந்தூரியின் ரகசிய புகைப்படங்களை ரூபா நேற்றுமுன்தினம் திடீரென சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அந்த படங்களை அவர் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பினார் என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன் ரோகிணி சிந்தூரி மீது அவர் 19 கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுகுறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு விளக்கம் அளித்த ரோகிணி சிந்தூரி, தனது சொந்த புகைப்படங்களை பகிரங்கப்படுத்திய ரூபா மனம் நல பாதித்தவர் போல் செயல்படுவதாவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கர்நாடகத்தில் பெண் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரிகள் இவ்வாறு மோதிக்கொண்டு இருப்பது கர்நாடக அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை செயலாளரிடம் நேரில் புகார்

இந்த நிலையில் இதுகுறித்து 2 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும்படி தலைமை செயலாளருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். மேலும் அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கையை எடுக்கும்படியும் முதல்-மந்திரி அறிவுறுத்தியுள்ளார். முதல்-மந்திரியின் உத்தரவுப்படி அவர்கள் 2 பேருக்கும் தலைமை செயலாளர் வந்திதா சர்மா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, முதலில் நேற்று காலை ரோகிணி சிந்தூரி விதான சவுதாவுக்கு நேரில் வந்து தலைமை செயலாளர் வந்திதா சர்மா முன்பு ஆஜராகி ரூபாவுக்கு எதிராக ஒரு புகார் கடிதத்தை கொடுத்து விளக்கம் அளித்தார். அதில் தனக்கு எதிராக அவதூறான முறையில் தனது தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், சட்ட விதிகளை மீறி ஊடகங்களில் என்னை பற்றி தவறான தகவலை பரப்பி இருப்பதாகவும், ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு கொண்டார்.

ரோகிணி சிந்தூரி பேட்டி

பின்னர் ரோகிணி சிந்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

என் மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக எனது சொந்த விவகாரங்கள் குறித்து பேசி இருப்பதுடன், சமூக வலைதளங்களில் என்னுடைய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் தலைமை செயலாளரை சந்தித்து ரூபா மீது புகார் அளித்துள்ளேன். நான் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருப்பதில்லை. என்னுடைய சொந்த விவகாரங்கள் குறித்து ரூபா பேசி இருப்பதால், அதுபற்றி என்னுடைய கணவர் பேசுவார்.

எந்த சந்தர்ப்பத்திலும் சமூக வலைதளங்களில் ஒருவரை பற்றி பொய் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. உண்மை எது என்பது ஒரு நாள் வெளியே வரும். தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள், விவகாரங்கள் குறித்து தலைமை செயலாளர் வந்திதா சர்மாவிடம் விளக்கமாக எடுத்து கூறியிருக்கிறேன். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பதால், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முன்பு பகிரங்கமாக எதுவும் பேச முடியாது. அதனால் என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க இயலாது. எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரூபா வெளியிட்டதுடன், 3 அதிகாரிகளுக்கு நான் புகைப்படங்களை அனுப்பியதாக கூறியுள்ளார். அந்த 3 அதிகாரிகள் யார்? என்பதை முதலில் அவர் சொல்லட்டும்.

இவ்வாறு ரோகிணி சிந்தூரி கூறினார்.

ரூபாவும் புகார்

அதைத்தொடர்ந்து விதான சவுதாவுக்கு வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை சந்தித்து ரோகிணி சிந்தூரிக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களுடன் ஒரு 4 பக்க கடிதம் கொடுத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் கூறிய புகார்கள் குறித்து ரோகிணி சிந்தூரி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதைவிடுத்து தலைமை செயலாளரிடம் எனக்கு எதிராக அவர் சில அடிப்படை ஆதாரமற்ற புகார்களை கூறியுள்ளார். ஜாலஹள்ளியில் ரோகிணி சிந்தூரி ஒரு ஆடம்பரமான வீட்டை கட்டி வருகிறார். அதை தனது சொத்து விவரங்கள் பட்டியலில் குறிப்பிடவில்லை. அது தனது சொத்து இல்லை என்றும், அது தனது மாமியாருக்கு சேர்ந்தவை என்றும் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தானே வசிக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது, அது அவரது வீடு இல்லை என்று எப்படி கூற முடியும்?. அந்த வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்களை வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்துள்ளார். அதற்கு இங்கு வரி கட்டாமல் ஏமாற்றியுள்ளார்.

திருப்பதியில் கர்நாடக அரசு பக்தர்கள் தங்கும் விடுதி மாநில அரசால் கட்டப்படுகிறது. தற்போது அவர் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக உள்ளார். அந்த கட்டுமான பணிகள் அவரது அதிகாரத்தின் கீழ் தான் வருகிறது. அந்த கட்டிடத்திற்கு 'டிசைன்' உருவாக்க ஒரு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதுகுறித்தும் தலைமை செயலாளரிடம் கூறியுள்ளேன். அவர் மைசூரு கலெக்டராக இருந்து பணி இடமாறுதல் செய்யப்பட்டபோது, அங்கிருந்து அரசுக்கு சொந்தமான பொருட்களை தனது சொந்த பயன்பாட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

நடவடிக்கை எடுக்கவில்லை

ரோகிணி சிந்தூரிக்கு எதிரான புகார்கள் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. அதில் ரவிசங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் தவறு செய்துள்ளது உறுதி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரை யார் காப்பாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த 25 நாட்களுக்கு முன்பே நான் அரசுக்கு ரோகிணி சிந்தூரி விவகாரம் குறித்து தெரிவித்துள்ளேன்.

கொரோனா காலத்தில் சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 24 பேர் உயிரிழந்தனர். இதற்கு அவர் தான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அவர் தனது தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதன் நோக்கம் என்ன?. சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ.வுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் போய் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது சரியா?. அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ரூபா கூறினார்.

சட்ட நடவடிக்கை

பெண் அதிகாரிகள் மோதல் தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

"ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரின் தனிப்பட்ட புகைப்படத்தை இன்னொருவர் பகிரங்கப்படுத்தியது சரியல்ல. அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் விவாதிப்பது ஏற்புடையது அல்ல. இந்த விவகாரம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்மாதிரியாக இருக்க வேண்டிய உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தவறு. இவர்களின் செயலால் பிற உயர் அதிகாரிகள் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கு முன்பும் அவர்களுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனாலும் இத்தகைய ஒழுங்கீன செயல்கள் தொடர்ந்து வருகின்றன".

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகளின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story