ஏ.டி.எம்.மில் ரூ.19 லட்சம் திருடிய காவலாளி கைது
வில்சன்கார்டனில் ஏ.டி.எம்.மில் ரூ.19 லட்சம் திருடிய காவலாளி கைது செய்யப்பட்டார்.
வில்சன்கார்டன்:
பெங்களூரு வில்சன்கார்டன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.19 லட்சம் கொஞ்சம், கொஞ்சமாக திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் வில்சன் கார்டன் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வரும் அசாமை சேர்ந்த திபோங்கர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
முதலில் முன்னுக்குப்பின் பேசிய திபோங்கர் பின்னர் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். தனது காதலியை திருமணம் செய்வதற்காகவும், திருமணம் செய்த பின்னர் ஓட்டல் கட்டுவதற்காகவும் திபோங்கர் ரூ.19 லட்சம் திருடியது தெரியவந்தது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்ப வருபவர்களிடம் நன்றாக பழகிய திபோங்கர் அவர்கள் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தின் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) தெரிந்து வைத்து கொண்டு திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான திபோங்கரிடம் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. திபோங்கர் மீது வில்சன் கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.