புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை 'சவப்பெட்டியுடன்' ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம்


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம்
x

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ‘சவப்பெட்டியுடன்’ ஒப்பிட்டு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்பட்டுள்ளது.

பாட்னா,

96 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை நடவடிக்கையில் நடந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கந்த 3 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் பணிகள் நிறைவடைந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மக்கள் பணத்தில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததால் திறப்பு விழா நிகழ்ச்சியை காங்கிரஸ், திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. நாட்டின் ஜனநாயகம் அவமதிக்கப்பட்டுவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை 'சவப்பெட்டியுடன்' ஒப்பிட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனாதா தளம் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சவப்பெட்டி மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிட புகைப்படத்தை பகிர்ந்து 'என்ன இது' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவர் சக்தி சிங் கூறுகையில், எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சவப்பெட்டி புகைப்படம் நாட்டின் ஜனநாயகம் புதைக்கப்பட்டுவிட்டதை காட்டுகிறது. நாடு இதை ஏற்றுக்கொள்ளாது. நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். அங்கு விவாதங்கள் நடைபெற வேண்டும்' என்று கூறினார். பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் கட்சியே ராஷ்டிரிய தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தில் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட நபர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்' என்றார்.


Next Story