திருவள்ளுவருக்கு, பா.ஜனதாவினர் அவமானம் இழைத்து உள்ளனர்; ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. பேட்டி
சுற்றுச்சுவரை இடித்ததன் மூலம் திருவள்ளுவருக்கு, பா.ஜனதாவினர் அவமானம் இழைத்து விட்டனர் என்று ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
பெங்களூரு:
சுற்றுச்சுவரை இடித்ததன் மூலம் திருவள்ளுவருக்கு, பா.ஜனதாவினர் அவமானம் இழைத்து விட்டனர் என்று ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சுற்றுச்சுவர் இடிப்பு
பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை உள்ளது. இந்த சிலை அமைந்து உள்ள இடம் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.2 கோடி செலவில் புனரமைக்கப்படும் என்று சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத் கூறி இருந்தார். மேலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலையை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. அந்த சுற்றுச்சுவர் சிலையின் கல்வெட்டுகளை மறைக்கும் வகையில் உள்ளதாக கூறியும், அனுமதி பெறாமல் பணி நடந்து வருவதாகவும் கூறியும் நேற்று பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. மாநகராட்சி உத்தரவின்பேரில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதாக பா.ஜனதாவினர் கூறினர்.
தமிழ் மீது பற்று
ஆனால் இதனை ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனக்கு தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உள்ளது. தமிழ் மக்கள் மீது உள்ள அன்பு காரணமாக திருவள்ளுவர் சிலையை எனது எம்.எல்.ஏ. நிதியில் இருந்து புனரமைக்க முடிவு செய்தேன். தலைசிறந்த கட்டுமான நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த பணியை முன்னெடுத்து செய்து வந்தேன். சிலையை சுற்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவரால் கல்வெட்டு மறைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
சுற்றுச்சுவர் கட்டும் போது கல்வெட்டில் பாதி மறைந்தது உண்மை தான். ஆனால் பழைய கல்வெட்டுக்கு பதிலாக புதிதாக கல்வெட்டை வைக்கவும் முடிவு செய்தேன். பழைய கல்வெட்டில் இருக்கும் வாசகங்கள் புதிய கல்வெட்டிலும் இடம் பெறும். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளுவருக்கு அவமானம்
சிலையின் அருகே மாநகராட்சி சார்பில் வேறு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. அங்கு இருந்த என்ஜினீயர்களை பா.ஜனதாவினர் மிரட்டி திருவள்ளுவர் சிலையின் சுற்றுச்சுவரை பொக்லைன் மூலம் இடிக்க செய்து உள்ளனர். சுற்றுச்சுவரை இடிக்க மாநகராட்சி உத்தரவிடவில்லை. மாநகராட்சி உத்தரவிட்டதாக பா.ஜனதாவினர் பொய் கூறுகின்றனர்.
சுற்றுச்சுவரை இடித்ததன் மூலம் திருவள்ளுவருக்கு, பா.ஜனதாவினர் அவமானம் இழைத்து உள்ளனர். சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து நாளை (அதாவது இன்று) திருவள்ளுவர் சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.