ராம நவமி கொண்டாட்டம்: வட மாநிலங்களில் வன்முறை: போலீஸ் தடியடி; வாகனங்களுக்கு தீ வைப்பு


ராம நவமி கொண்டாட்டம்: வட மாநிலங்களில் வன்முறை: போலீஸ் தடியடி; வாகனங்களுக்கு தீ வைப்பு
x

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்ட ராமநவமி விழா கொண்டாட்டம் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மேற்குவங்காளம்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் இன்று ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது சிலர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். மேலும் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தை குறைக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ராம நவமி பேரணியில் மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குஜராத்

இதே போன்று குஜராத் மாநிலம் வதோதராவில் ராம நவமி பண்டிகையினையொட்டி, இன்று யாத்திரை நடந்தது. இந்த யாத்திரை பதேபுராவில் உள்ள மசூதி அருகே வந்போது நடந்த இரு தரப்பு மோதல் வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்றுள்ளனர். எனினும் அங்கு பதற்றம் காணப்படுகிறது.

மராட்டியம்

மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரிலும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு கல்வீச்சு சம்பவம் அரங்கேறியது.

சமீபத்தில் ஒளரங்காபாத் பெயரை சத்ரபதி சாம்பாஜி நகர் என்று மாநில அரசு மாற்றியது. தற்போது முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். நேற்று இரவு நகரின் கிரத்புரா என்ற இடத்தில் இருக்கும் ராமர் கோயிலில் ராம நவமி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் இளைஞர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்று இடித்துக்கொண்டது தொடர்பாக இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் சென்று கூடுதல் ஆட்களை அழைத்து வந்தனர். இதில் இரு மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மோதிக்கொண்டனர்.

இது மற்றவர்களுக்கும் பரவியது. இதனால் ஏராளமானோர் சாலையில் நின்றுகொண்டு கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசித் தாக்கிக்கொண்டனர். 500-க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீஸாரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

போலீசார்மீது கல் வீசப்பட்டது. வன்முறையில் ஏற்பட்ட கும்பல் சாலைகளில் நின்ற வாகனங்களைத் தீ வைத்து எரித்தனர். இது குறித்து போலீஸ் கமிஷனர் நிகில் குப்தா, ``இளைஞர்கள் சிலர் மோதிக்கொண்ட பிறகு இந்த வன்முறை ஏற்பட்டிருக்கிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வன்முறை ஒரு மணி நேரம் நடந்தது. இதில் ஏழு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. எரிந்த வாகனங்கள் சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. ஆனால், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார். fiநகரில் பாதுகாப்புக்குக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story