சோலார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு: 2 விவசாயிகள் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை


சோலார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு:  2 விவசாயிகள் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை
x

தனியார் சோலார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்த 2 விவசாயிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கமகளூரு;

தனியார் சோலார் மின்நிலையம்...

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா திம்மலாபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் திம்மய்யா, மகேஸ்வரப்பா. விவசாயிகளான இவர்கள் 2 பேருக்கும் பஞ்சேனஹள்ளி பகுதியில் சொந்தமாக விளைநிலங்கள் உள்ளது. பஞ்சேனஹள்ளி கிராமம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே எல்லையில் உள்ளது.

இந்த நிலையில் அரிசிகெரே தாலுகா கனகட்டே கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 130 மெகாவாட்டில் சோலார் மின்நிலையம் அமைத்து வருகிறது. இதற்கான கட்டுமான பொருட்களை 2 பேரின் விளைநிலங்கள் வழியாக வாகனங்களில் எடுத்து சென்றுள்ளனர். மேலும் 2 மின்கம்பங்கள் இவர்களின் நிலங்களுக்குள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் மீது தாக்குதல்

இதனை கண்டித்தும், சோலார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் 2 பேரும் தனியார் சோலார் மின்நிலைய அதிகாரிகளான சத்திய நாராயணன், மல்லிகார்ஜுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த சத்தியநாராயணன், மல்லிகர்ஜுன் ஆகியோர் விவசாயிகளான திம்மய்யா, மகேஸ்வரப்பா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கடூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story