கேரளாவுக்கு 10 கன்டெய்னர்களில் கடத்திய 220 மாடுகள் மீட்பு
கேரளாவுக்கு இறைச்சிக்காக 10 கன்டெய்னர்களில் கடத்திய 220 மாடுகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
எச்.டி.கோட்டை
மாடு கடத்தல்
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா அந்தரசந்தே பகுதியில் கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதாக இந்து அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்து அமைப்பினர் அந்தரசந்தே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அந்தரசந்தே அருகே கேரள எல்லையில் உத்புரு சோதனைச்சாவடியில் இந்து அமைப்பினர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசாா் சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னர் லாரியில் மாடுகள் ெகாடூரமான முறையில் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன.
220 மாடுகள் மீட்பு
மேலும், மச்சூர் பகுதியிலும் கன்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதிலும் மாடுகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஒட்டுமொத்தமாக 10 கன்டெய்னர் லாரிகளில் கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசாா் 10 கன்டெய்னர் லாரிகளில் இருந்தும் 220 மாடுகளை மீட்டனர். இதுதொடர்பாக லாரிகளில் இருந்த 11 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மாடுகளை இறைச்சிக்காக கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 220 மாடுகளையும் போலீசார் கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். 10 கன்டெய்னர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் ெசய்தனர்.
கோசாலைக்கு அனுப்பி வைப்பு
இதுகுறித்து அந்தரசந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 11 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். எங்கிருந்து மாடுகளை கடத்தி சென்றனர், இதற்கு பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
ஒரே நாளில் இறைச்சிக்காக கடத்திய 220 மாடுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காங்கிரஸ் அரசு மீது இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது காங்கிரஸ் அரசு உதவியுடன் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.