மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது


மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 22 April 2024 9:13 AM IST (Updated: 22 April 2024 12:58 PM IST)
t-max-icont-min-icon

மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 11-வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இம்பால்,

கடந்த 19-ம் தேதி நாடு முழுதும் நடந்த முதற்கட்ட தேர்தலின் போது உள் மணிப்பூர் தொகுதிக்கு முழுமையாகவும், வெளி மணிப்பூர் தொகுதிக்கு பகுதியளவாகவும் ஓட்டுப்பதிவு நடந்தது. அப்போது உள் மணிப்பூர் தொகுதிக்கு உட்பட்ட இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் பல்வேறு ஓட்டுப்பதிவு மையங்களில் வன்முறை நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஓட்டுப்பதிவு மையங்களை கைப்பற்றும் முயற்சிகளும் நடந்தன.

இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைமை தேர்தல் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. உள் மணிப்பூரின், 36 ஓட்டுப்பதிவு மையங்களிலும், வெளி மணிப்பூரின் 11 மையங்களிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் குரை, சேத்ரிகோ, தோங்ஜு, உரிபோக் கொந்தவுஜாம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 11 ஓட்டுச்சாவடிகளில் இன்று மறு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த முறை வன்முறை ஏற்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story