தோல் நோயால் இறக்கும் மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்; குமாரசாமி வலியுறுத்தல்
தோல் நோயால் இறக்கும் மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பல பகுதிகளில் பசு மாடுகள் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் இறந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இறக்கும் மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்ய கூட டாக்டர்கள் இல்லாத நிலை உள்ளது. இந்த தோல் நோயால் இறக்கும் மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் போதாது. அதனால் இறக்கும் மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவேன். இந்த நோய் பரவலை தடுக்க தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு விரைந்து செயல்படாமல் நேரத்தை விரயமாக்குகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.