ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை: காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை: காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு  முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 14 Nov 2022 10:15 PM (Updated: 14 Nov 2022 10:16 PM)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

நேருவின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேருவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விவகாரத்தில் கவர்னர் உரிய நேரத்தில் முடிவெடுக்காததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த விடுதலையை ஒரு சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன.மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம். புதுவையில் காங்கிரஸ் ஆட்சியின்போது அரிசி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். அதனை அவர்கள் நிரூபிக்க முடியுமா?

இலவச அரிசிக்கு பதிலாக பணம்தான் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுதான் உத்தரவிட்டது. மாநில அரசின் நிதியில் தான் இலவச அரிசி வழங்கப்பட்டது. மத்திய அரசு அதற்கு தடையாக இருக்கக்கூடாது என்று கோர்ட்டுக்கு சென்றோம். அரிசி வழங்க அப்போதைய கவர்னர் கிரண்பெடிதான் தடையாக இருந்தார்.

நாங்கள் ஊழல் செய்தோம் என்றால் ஏன் விசாரணை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீது கூறுவதுதான் பா.ஜ.க.வின் வேலையாகிவிட்டது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story