பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா தின விழா ஏற்பாடுகள் குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை
மைசூருவில் 21-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா தின விழா ஏற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு: மைசூருவில் 21-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா தின விழா ஏற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
யோகா தின விழா
மைசூருவில் வருகிற 21-ந் தேதி யோகா தின விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதுகுறித்து ஏற்பாடுகள் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று சுதாகர், எஸ்.டி.சோமசேகர், நாராயணகவுடா, தலைமை செயலாளர் வந்திதா சர்மா, போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
21-ந் தேதி மைசூருவில் நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் 15 ஆயிரம் யோகா பயிற்சியாளர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 15 ஆயிரம் பேரை தோ்வு செய்யும் பணியை வருகிற 13-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியபடி இதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். இந்த பணிகளை மைசூரு மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.
14 துணை குழுக்கள்
இந்த விழாவில் கலந்துகொள்கிறவர்களுக்கு பஸ் வசதி, சிற்றுண்டி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். விழாவில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதுகுறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் மத்திய அரசின் ஆயுஸ் துறை யோகா கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 14 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் வருகையின்போது பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சுதந்திர தின பவள விழாவையொட்டி நாட்டின் 75 பாரம்பரிய தலங்களில் யோகா தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகத்தில் மைசூரு, ஹலேபீடு, ஹம்பி, பட்டதகல் மற்றும் விஜயபுரத்தில் உள்ள கோல்கும்பஸ் ஆகிய இடங்களில் யோகா தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மாநில அளவில் கர்நாடகத்தில் 75 இடங்களில் யோகா தின விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.