தனியார் பள்ளியில் மாணவியை அவமானப்படுத்திய விவகாரத்தில் ஆசிரியை மீது பதிவான வழக்கை ரத்து செய்ய மறுப்பு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் பள்ளியில் மாணவியை அவமானப்படுத்திய விவகாரத்தில் ஆசிரியை மீது பதிவான வழக்கை ரத்து செய்ய மறுப்பு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

தனியார் பள்ளியில் மாணவியை அவமானப்படுத்திய விவகாரத்தில் ஆசிரியை மீது பதிவான வழக்கை ரத்து செய்ய மறுத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

மாணவிக்கு அவமானம்

பெங்களூரு அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு 5 வயது சிறுமி நர்சரி படித்து வந்தாள். அந்த பள்ளியில் 41 வயது ஆசிரியை பணியாற்றி வருகிறார். பள்ளியில் வைத்து அந்த மாணவி சேட்டை செய்ததாக தெரிகிறது. இதனால் மாணவியின் பேண்ட்டை கழற்றி, 2 நிமிடம் நிற்க வைத்து அந்த ஆசிரியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

இதுகுறித்து அல்சூர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியை மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

வழக்கை ரத்து செய்ய மறுப்பு

இந்த நிலையில், தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளி ஆசிரியை சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மாணவிக்கு ஆசிரியை எந்த விதமான பாலியல் தொல்லையும் வழங்கவில்லை, அதனால் அவர் மீது பதிவாகி உள்ள போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். சிறுமியை அனைவரின் முன்னிலையில் வைத்து அவமானப்படுத்தி தண்டனை கொடுத்திருப்பதை ஏற்க முடியாது. இதுபோன்று ஆசிரியை நடந்து கொண்டு இருப்பதால் சிறுமியின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே ஆசிரியை மீது பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆசிரியை தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.


Next Story