ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு; சுள்ளியா, மடிகேரியில் மீண்டும் நிலநடுக்கம்


ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு; சுள்ளியா, மடிகேரியில் மீண்டும் நிலநடுக்கம்
x

சுள்ளியா, மடிகேரியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மங்களூரு;

சுள்ளியா

கர்நாடகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலோர, மலைநாடு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 25-ந் தேதி தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதாவது தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியாவில் சில கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 4.7 கிலோ மீட்டர் வரை நில அதிர்வு உணரப்பட்டது. இவை ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவானது. அப்போது சில இடங்களில் வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது.

சில வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

மீண்டும் நிலநடுக்கம்

இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து சுள்ளியாவில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை சுள்ளியா தாலுகாவில் உள்ள சம்பாஜே, அரந்தோடு, பேராஜே, ஜல்சூர், உப்பாரட்கா, தோடிகனா, மித்தூர் ஆகிய கிராமங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேற்று காலை 7.45 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவை கடந்த முறை காட்டிலும் அதிகமாக நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகியது. இதில் சில வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே உருண்டு விழுந்தன. வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் லேசான அதிர்வு ஏற்பட்டது.

சில இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து மாநில தேசிய பேரிடர் மீட்பு மைய அதிகாரிகள் கூறும்போது:-

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் சில கிராமங்களில் நேற்று காலை 7.45 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இவை ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியிருக்கிறது. லேசான நில நடுக்கம்தான். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் பயப்படவேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மடிகேரியில்...

இதேபோன்று குடகு மாவட்டத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். குறிப்பாக மடிகேரி தாலுகாவில் உள்ள செம்பு, கரிக்கே, கக்கண்டபானே, ஜெயண்டபானே, ஜேலாவாரா, குக்கேரி, கடங்கள், பாகமண்டலா, சேராவே சம்பாஜே ஆகிய இடங்களில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 முறை ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது ரிக்டரில் 2.1 ஆக பதிவாகியிருந்தது.

இந்த முறை அதைவிட அதிகமாக 3.0 ரிக்டர் அளவாக நில நடுக்கம் பதிவாகியது. சரியாக காலை 7.45 மணிக்கு பொதுமக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளனர். இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தன. சில இடங்களில் வளர்ப்பு பிராணிகள் நில அதிர்வை உணர்ந்து பயந்து ஓடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.


Next Story