சமீபத்திய நிகழ்வுகளால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் - உத்தரகாண்ட் முதல்-மந்திரி வேதனை
உத்தரகாண்டில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்-மந்திரி புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த 18-ம் தேதி முதல், சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இது குறித்து 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண்ணின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில், ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அதன் மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் 14 நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இளம்பெண் அங்கிதா கொலையை கண்டித்து உத்தரகாண்ட் முதல் டெல்லி வரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் தாமி தலைமையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய அவர், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியை பராமரிப்பது அதிகாரிகளின் பொறுப்பு ஆகும். மேலும், அரசு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.