தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட தயார்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட தயார்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x

காவிரி நீர் பிரச்சினையில் 2 மாநில விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட தயராக இருப்பதாகவும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

மனு தாக்கல்

காவிரி நீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி நீரை திறந்துவிடும்படி உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி படுகையில் பெய்து வரும் மழை மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம். புதிதாக பயிரிட வேண்டாம் என்று மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தயாராக உள்ளோம்

குடிநீருக்கு தேவையான நீரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட நாங்கள் தயாராக உள்ளோம். நீர் திறந்து விடும் முழுமையான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உள்ளது. 2 மாநில விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. அனைவரும் உண்மை நிலையை அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

கர்நாடக விவசாயிகளின் பயிர்கள் காயக்கூடாது. அதேபோல் தமிழ்நாடு விவாயிகளின் பயிரும் காயக்கூடாது. அந்த ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள மனு குறித்து நாங்கள் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்த உள்ளோம். நாங்கள் எந்த மோதலுக்கும் தயாராகும் நிலையில் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்களை போன்றவர்கள். மோதலில் ஈடுபடாமல் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

காவிரி நீர் பங்கீட்டு விஷயத்தில் இடர்பாட்டு கால சூத்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். தமிழ்நாடு இவ்வளவு அவசரமாக சுப்ரீம் கோர்ட்டு படி ஏறி இருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்/குமார் கூறினார்.


Next Story