பி.எம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் நியமனம்
பிஎம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பெருந் தொற்றின் போது அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி பிரதமர் மோடி "பிஎம் கேர்ஸ்' என்ற நிதியத்தை அறிவித்தார். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்து வருகிறார்கள். இந்த நிதியின் மூலம் நாட்டில் பல தரப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரமதர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பி.எம். கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முன்டா, தொழிலதிபர் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இது குறித்து பேசும் போது, புதிய அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களின் பங்களிப்பு பி எம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.