மத்திய பிரதேச மாநிலத்தில்டைனோசர் கூடுகள், முட்டைகள் கண்டுபிடிப்பு- ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்


மத்திய பிரதேச மாநிலத்தில்டைனோசர் கூடுகள், முட்டைகள் கண்டுபிடிப்பு- ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்
x

டைனோசர்கள் என்றாலே நம் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியத்தில் கண்கள் விரியும். ஒரு இனம்புரியாத குதூகலமும் ஏற்படும்.

போபால்,

பிரமாண்டமான இந்த டைனோசர்கள் பற்றி நிறைய கதைகளும், திரைப்படங்களும், ஆய்வு முடிவுகளும் வந்து கொண்டே இருக்கின்றன.குறிப்பாக 1997-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான 'ஜூராசிக் பார்க்' திரைப்படம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அந்தப் படம், டைனோசரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது என்றால் அது மிகையல்ல.தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை பள்ளத்தாக்கு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் டைனோசர் கூடுகள் மற்றும் 256 முட்டைகளை கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி டைனோசர்கள் பற்றிய சுவாரசியத்தை அதிகரித்துள்ளன.

டெல்லி பல்கலைக்கழகம், மோகன்பூர்-கொல்கத்தா மற்றும் போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தின் (நர்மதை பள்ளத்தாக்கில்) தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குக்ஷி பகுதிகளில் 256 புதை படிவ முட்டைகளையும், கூடுகளையும் கண்டுபிடித்துள்ளனர். இவை அளவில் மிகப்பெரியவை.

இது குறித்த ஆய்வுத்தகவல்கள், பிளாஸ் ஒன் என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் ஹர்ஷா திமன், விஷால் வர்மா, குண்டுபள்ளி பிரசாத் உள்ளிட்டவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.டைனோசர் கூடுகள் மற்றும் முட்டைகள் பற்றிய ஆய்வு, 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர்களின் வாழ்க்கையைப் பற்றிய முக்கிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளன.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான விஷால் வர்மா கூறியதாவது:-

டெதிஸ் கடல், நர்மதையுடன் இணைந்த இடத்தில் உருவான கழிமுகத்தில் இருந்து டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நர்மதை பள்ளத்தாக்கில் காணப்படும் கூடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருந்தன. பொதுவாக கூடுகள் ஒன்றுக்கொன்று சிறிது தூரத்தில் அமைந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.நர்மதை பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டைகள் 15 செ.மீ. முதல் 17 செ.மீ. வரையிலான விட்டம் கொண்டவை ஆகும்.ஒவ்வொரு கூட்டிலும் 1 முதல் 20 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறுகையில், "2017-ம் ஆண்டுக்கும், 2020-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் போது தார் மாவட்டத்தில் பாக் மற்றும் குஷி பகுதரிகளில் குறிப்பாக அகாடா, தோலியா ராய்புரியா, ஜாபா, ஜாம்னியாபுரம், பாட்லியா கிராமங்களில் டைனோசர்கள் குஞ்சு பொரிப்பது பற்றி விரிவாகக் கண்டறிந்தோம்" என தெரிவித்தனர்.இந்த டைனோசர் கூடுகள் மற்றும் முட்டைகள் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன. எனவே இன்னும் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.


Next Story