கோகாக்கில் 7-வது வெற்றியை பெறும் முனைப்பில் ரமேஷ் ஜார்கிகோளி
கர்நாடகத்தில் பெரிய மாவட்டம் மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. மொத்தம் 18 சட்டசபை தொகுதிகளை இது உள்ளடக்கி உள்ளது. இதில் பெலகாவிக்கு அடுத்தப்படியாக பெரிய நகரம் கோகாக். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்த ரமேஷ் ஜார்கோளியின் தொகுதியாகும்.
கோகாக் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கொடி கட்டி பறக்கிறது. இது காங்கிரசின் கோட்டை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கோகாக் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு இதுவரை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளே சாட்சி. கோகாக் சட்டசபை தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் கடந்த 2018-ம் ஆண்டு வரை 12 தேர்தல்கள் நடந்துள்ளது. இதில், 9 முறை காங்கிரஸ் கட்சியும், 3 முறை ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த 5 சட்டசபை தேர்தல்களில் ரமேஷ் ஜார்கிகோளி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். கூட்டணி ஆட்சி மீது எழுந்த அதிருப்தி காரணமாக ரமேஷ் ஜார்கிகோளி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முக்கிய காரணம் ரமேஷ் ஜார்கிகோளி தான்.
அவர் தான் கூட்டணி ஆட்சியில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்களை தன்னுடன் அழைத்து சென்று பா.ஜனதாவில் இணைந்து கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பா.ஜனதா ஆட்சியை பிடிக்க உதவியாக இருந்தார்.
இதற்கு கைமாறாக பா.ஜனதா
அவருக்கு நீர்ப்பாசனத்துறையை ஒதுக்கியது. 2 ஆண்டுகள் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றிய ரமேஷ் ஜார்கிகோளி, ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த போலீஸ் விசாரணையில், அவர் குற்றமற்றவர் என்று 'பி' அறிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதனால் ரமேஷ் ஜார்கிகோளி சற்று நிம்மதி அடைந்தார்.
இந்த தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் ரமேஷ் ஜார்கிகோளி கோகாக் தொகுதியில் களமிறங்கி உள்ளார். அவர் கடந்த 1999-ம் ஆண்டு முதல் கடந்த 2019-ம் ஆண்டு வரை தோல்வியையே சந்திக்காமல் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர், 72,888 வாக்குகள் பெற்று ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் சந்திரசேகர் நாயக்கை (15,932 வாக்குகள்) 56, 956 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த தேர்தலில் ரமேஷ் ஜார்கிகோளி 72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.
2004-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரமேஷ் ஜார்கிகோளி போட்டியிட்டார். அதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் மல்லப்பா லட்சுமண் என்பவரை 16,175 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ரமேஷ் ஜார்கிகோளி 56,768 வாக்குகளும், மல்லப்பா லட்சுமண் 40,593 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கோகாக் தொகுதியில் மீண்டும் காங்கிரசில் இருந்து களமிறங்கிய ரமேஷ் ஜார்கிகோளி 44,989 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் அசோக் நிங்கய்யா 37,229 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 7,760 ஆகும்
2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கோகாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரமேஷ் ஜார்கிகோளி போட்டியிட்டு 28,005 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அசோக் நிங்கய்யாவை வீழ்த்தினார். ரமேஷ் ஜார்கிகோளி 79,175 வாக்குகளும், அசோக் நிங்கய்யா 51,170 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ரமேஷ் ஜார்கிகோளி தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் 90,249 வாக்குகளையும், பா.ஜனதாவின் அசோக் நிங்கய்யா 75,969 வாக்குகளையும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 14,280 ஆகும்.
2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ரமேஷ் ஜார்கிகோளி பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 87,450 வாக்குகள் பெற்று காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவரது தம்பி லகன் ஜார்கிகோளியை (58,444 வாக்குகள்) 29,006 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த முறை காங்கிரஸ் சார்பில் மகாந்தேஷ் கடாடி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் சந்தன்குமார் போட்டியிடுகிறார். கோகாக் தொகுதியில் காங்கிரஸ் பலம் வாய்ந்ததாக இருந்தாலும், அங்கு செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் ரமேஷ் ஜார்கிகோளியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் மற்றும் சரியான வளர்ச்சி பணிகளை செய்யாதது போன்றவை ரமேஷ் ஜார்கிகோளிக்கு பின்னடைவாகும். ஆனாலும் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருப்பது ரமேஷ் ஜார்கிகோளிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பு அலைகளை மீறி ரமேஷ் ஜார்கிகோளி கோகாக் தொகுதியில் 7-வது வெற்றியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
ஆண்டு வெற்றி தோல்வி
1967 எல்.எஸ்.நாயக்(காங்.)-17,522 பி.எச்.கார்ன்னிங்(சுயே.)-7,144
1972 தம்மண்ணா(காங்.)-28,005 பி.எம்.பட்டீல்(என்.சி.ஓ.)-11,144
1978 லட்சுமண் சித்தப்பா(காங்.)-31,447 கட்டிமணி சந்தப்பா(ஜனதா கட்சி)-13,980
1983 மல்லப்பா லட்சுமண்(ஜனதா கட்சி)-26,258 லட்சுமண் சித்தப்பா(காங்.)-23,253
1985 மல்லப்பா லட்சுமண்(ஜனதா கட்சி)-33,806 லட்சுமண் ஜார்கிகோளி(காங்.)-29,537
1989 சங்கர் ஹேமந்த்(காங்.)-37,781 மல்லப்பா லட்சுமண்(ஜனதாதளம்)-22,723
1994 சந்திரசேகர் நாயக்(ஜனதாதளம்)-37,891 சங்கர் ஹேமந்த்(காங்.)-24,741
1999 ரமேஷ் ஜார்கிகோளி(காங்.)-72,888 சந்திரசேகர் நாயக்(ஜ.தளம்-ஐ)-15,932
2004 ரமேஷ் ஜார்கிகோளி(காங்.)-56,768 மல்லப்பா லட்சுமண்(பா.ஜ.க.)-40,593
2008 ரமேஷ் ஜார்கிகோளி(காங்.)-44,989 அசோக் நிங்கய்யா(ஜ.தளம்-எஸ்)-37,229
2013 ரமேஷ் ஜார்கிகோளி(காங்.)-79,175 அசோக் நிங்கய்யா(ஜ.தளம்-எஸ்)-51,170
2018 ரமேஷ் ஜார்கிகோளி(காங்.)-90,249 அசோக் நிங்கய்யா(பா.ஜ.க.)-75,969