ராமர் கோவில் திறப்பு விழா; முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் - ஹிமந்த பிஸ்வா சர்மா வேண்டுகோள்


ராமர் கோவில் திறப்பு விழா; முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் - ஹிமந்த பிஸ்வா சர்மா வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Jan 2024 10:15 PM GMT (Updated: 21 Jan 2024 10:18 PM GMT)

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது இந்திய நாகரிகத்தின் வெற்றி என ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

திஸ்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி(இன்று) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது இந்துக்களின் வெற்றி மட்டுமல்ல, இது இந்திய நாகரிகத்தின் வெற்றி. இது ஒரு மதத்தின் வெற்றி அல்ல. இந்த நாளில், பல்வேறு சாதி மற்றும் சமூகங்களைச் சேர்ந்த நாம் அனைவரும் ஒன்றாக இருக்க முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறென்.

பாபர் என்ற ஒரு ஆக்கிரமிப்பாளர் இந்திய வழிபாட்டுத் தலத்தை உடைத்தார். அவர் இந்துக்களை மட்டும் தாக்கவில்லை. ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்கும், பாபருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாபர் ஒரு அந்நிய சக்தி."

இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார். முன்னதாக அசாம் மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story