ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி குறித்து சர்ச்சை கருத்து; 'யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை' - இயக்குனர் ராம்கோபால் வர்மா
மகாபாரதத்தில் திரவுபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை.
புதுடெல்லி,
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒருவேளை திரவுபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்? மற்றும் மிகவும் முக்கியமாக பாண்டவர்கள் யார்?' என பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை' என்று பாஜக ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துக்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ராம்கோபால் வர்மா தன்னுடைய முந்தைய பதிவை மேற்கொள்காட்டி "மகாபாரதத்தில் திரவுபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பெயர் மிகவும் அபூர்வமானது என்பதால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை" என்று ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.