டெல்லி அரசு நிர்வாக மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித் ஷா


டெல்லி அரசு நிர்வாக மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித் ஷா
x
தினத்தந்தி 7 Aug 2023 11:40 AM GMT (Updated: 7 Aug 2023 12:19 PM GMT)

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம், இடமாற்றம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசு அதிகாரிகளின் நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அதிகாரத்தை தங்கள் வசம் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023-ஐ மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறும்பட்சத்தில் டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசே மேற்கொள்ளும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதேவேளை, நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3ம் தேதி இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மக்களவையில் மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும்பட்சத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்படும். சட்டமாக நிறைவேற்றப்படும்பட்சத்தில் டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் ஆம் ஆத்மி அரசின் உரிமை பறிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அதிகாரிகள் நியமனம் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story