மாநிலங்களவையில் வன விலங்குகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது
வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில், வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
காப்புக்காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளை பாதுகாக்கவும், அந்த பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீர் வசதி போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளை அனுமதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
நேற்று இந்த மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால், இரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டது.
30 நதிகள் இணைப்பு திட்டங்கள்
மக்களவையில், மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியதாவது:-
தீபகற்ப நதிகளில் 16 நதிகள் இணைப்பு திட்டங்களையும், இமயமலை நதிகளில் 14 நதிகள் இணைப்பு திட்டங்களையும் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
24 தி்ட்டங்களுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி விட்டது. மீதி திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகளே தயாராகி விட்டன.
முதலில், தீபகற்ப நதிகளில், கேன்-பேட்வா நதிகள் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.44 ஆயிரத்து 605 கோடி செலவாகும் என்று அவர் கூறினார்.
உஜ்வாலா
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-
இந்தியாவில், 2014-ம் ஆண்டு 14 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் இருந்தன. இது, இந்த ஆண்டு 32 கோடியே 50 லட்சம் இணைப்புகளாக உயர்ந்துள்ளது. இவற்றில், 9 கோடியே 60 லட்சம் இணைப்புகள், 'உஜ்வாலா' திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டவை.
சமையல் கியாசின் சர்வதேச விலை 303 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் 28 சதவீத அளவுக்கே இந்தியாவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
16 இந்திய மாலுமிகள் சிறைவைப்பு
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-
நைஜீரிய கடல் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு வர்த்தக கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 16 இந்திய மாலுமிகள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கினியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களை மீட்க நைஜீரியா மற்றும் கினியா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.
கொேரானா பரவல் காரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் விசா பெறுவதில் சவால்களை சந்தித்து வருவது மத்திய அரசுக்கு தெரியும். விசா வழங்குவதை எளிமைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.
போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தல்
மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கூறியதாவது:-
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்தே மோதலை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு கேட்டு வருகிறது.
இரு நாடுகளுடனும் பல்வேறு மட்டத்தில் இந்திய அரசு தொடர்பில் இருக்கிறது. ரஷியா, உக்ைரன் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் நமது ெவளியுறவுத்துறை மந்திரி தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் என்று அவர் கூறினார்.
எரிசக்தி மசோதா
மாநிலங்களவையில், எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதாவை மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார்.
எத்தனால், பசுமை ஹைட்ரஜன், பயோமாஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளுக்கு இந்தியா அளித்த உறுதிெமாழியை காப்பாற்றுவது இதன் நோக்கம் ஆகும். எரிபொருள் நுகர்வு விதிமுறைகளை மீறும் வாகனங்களின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க மசோதா வகை செய்கிறது.
மாசு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த இந்தியா பாடுபட்டு வருவதாக ஆர்.கே.சிங் தெரிவித்தார். இந்த மசோதா, ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது.
நிலுவை வழக்குகள்
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 11 ஆயிரத்து 49 பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. 25 ஐகோர்ட்டுகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக 8 லட்சத்து 77 ஆயிரம் சிவில் மற்றும் 3 லட்சத்து 74 ஆயிரம் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மாவட்ட மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக 6 லட்சத்து 91 ஆயிரம் சிவில் மற்றும் 27 லட்சத்து 26 ஆயிரம் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
கோர்ட்டு வழக்குகளை விரைவுபடுத்த சட்ட திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.