ராஜஸ்தான் மந்திரி மகன் மீது பலாத்கார குற்றச்சாட்டு: இளம்பெண் முகத்தில் ரசாயனம் வீச்சு; டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்


ராஜஸ்தான் மந்திரி மகன் மீது பலாத்கார குற்றச்சாட்டு:  இளம்பெண் முகத்தில் ரசாயனம் வீச்சு; டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
x

ராஜஸ்தான் மந்திரி மகன் மீது பலாத்கார குற்றச்சாட்டு கூறிய இளம்பெண் முகத்தில் ரசாயனம் வீசிய சம்பவத்தில் டெல்லி மகளிர் ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



புதுடெல்லி,



ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் பொது சுகாதார துறைக்கான மந்திரியாக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோகித் ஜோஷி.

இவர் மீது 23 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ரோகித் மீது 376, 328, 312, 366, 377 மற்றும் 506 ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜீரோ எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இளம்பெண் அளித்த புகாரில், கடந்த ஆண்டு பேஸ்புக் வழியே இருவரும் அறிமுகம் ஆனபின் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். முதன்முறையாக இளம்பெண்ணை சவாய் மாதோபூருக்கு வரும்படி கடந்த ஆண்டு ஜனவரி 8ந்தேதி ரோகித் கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்த பெண்ணும் சென்றுள்ளார். முதல் சந்திப்பிலேயே, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அடுத்த நாள் காலை எழுந்தபோது, ஆடையின்றி இருந்த இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரிடம் காட்டி மிரட்டியுள்ளார். அவற்றை சமூக ஊடகத்தில் பரப்பி விடுவேன் என அச்சுறுத்தியும் உள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பல முறை தவறாக நடந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 8ந்தேதியில் இருந்து நடப்பு ஆண்டு ஏப்ரல் 17ந்தேதி வரை பல முறை மந்திரியின் மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என அந்த புகாரில் தெரிவித்து உள்ளார்.

நன்றாக குடித்து விட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதுடன், அடித்தும், ஆபாச படங்களை எடுத்து வைத்து மிரட்டியும் உள்ளார். கடந்த ஆகஸ்டில் கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணிடம் அதனை கலைக்க சொல்லி ரோகித் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் காலிந்தி கஞ்ச் பகுதியில் தனது தாயாருடன் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை 2 மர்ம நபர்கள் நேற்று பின் தொடர்ந்து உள்ளனர்.

அவர்கள் திடீரென அந்த பெண்ணின் முகத்தில் நீல நிற மையை ஊற்றி விட்டு தப்பியோடி உள்ளனர். உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் துன்புறுத்துதல், குற்ற நோக்குடன் செயல்படுதல் மற்றும் நபரை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இளம்பெண்ணுக்கு எதிரான பலாத்கார வழக்கில் டெல்லி போலீசார் ரோகித்தின் இருப்பிடம் பற்றி தேடி வந்த நிலையில், கடந்த வியாழ கிழமை டெல்லி நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.

இதன்பேரில் அவருக்கு டெல்லி கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. எனினும், கடந்த வெள்ளி கிழமை ரோகித்திடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். வாக்குமூலமும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இளம்பெண் மீது மர்ம நபர்களின் தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி டெல்லி மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி டெல்லி போலீசிடம் கேட்டு கொண்டுள்ளது.

உங்களுடைய மந்திரியின் மகனை பாதுகாப்பதற்கு பதிலாக கைது நடவடிக்கையை எடுங்கள் என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் பெயரையும் குறிப்பிட்டு டெல்லி மகளிர் ஆணையம் சார்பிலான டுவிட்டரில் பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.


Next Story