ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு சிறையில் இருந்து கொலை மிரட்டல்


ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு சிறையில் இருந்து கொலை மிரட்டல்
x

ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில், சிறையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 9 மொபைல் போன்கள் தோண்டி எடுக்கப்பட்டன. சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தவுசா,

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்திரி பஜன் லால் சர்மா தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், தவுசா மாவட்டத்தில் உள்ள ஷியாலாவாஸ் சிறையில் இருந்து பஜன் லாலுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு லால்சோட் லோகேஷ் சோனவால் கூறும்போது, காலை (நேற்று) 7.30 மணியளவில் தவுசா எஸ்.பி. ரஞ்சிதா சர்மாவுக்கு ஜெய்ப்பூரில் உள்ள உயரதிகாரிகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஷியாலாவாஸ் சிறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்து நபர் ஒருவர் பேசியுள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த மிரட்டல் பற்றி விசாரிக்கும்படி தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவம் தெரிய வந்ததும், டி.ஐ.ஜி., உள்ளூர் காவல் அதிகாரி உள்பட உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றனர். சிறை அதிகாரிகளுடன் சேர்ந்து தேடுதல் பணி நடந்தது.

இதில், சிறையில் மறைவான பகுதியில், 9 மொபைல் போன்கள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவை தோண்டி எடுக்கப்பட்டன. சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மிரட்டல் விடுத்த நபர் கண்டறியப்பட்டு உள்ளார். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அந்த நபரின் பெயரை வெளியிட முடியாது என போலீஸ் சூப்பிரெண்டு லால்சோட் கூறியுள்ளார். டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த அந்த நபர், 376-வது பிரிவின் கீழ் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story