ரெயில் வரும் போது தண்டவாளத்தில் விழுந்து கிடந்த நபர், துணிச்சலாக மீட்ட ரெயில்வே ஊழியா் - வீடியோ
இந்த வீடியோவை இந்திய ரெயில்வே தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டு தொிவித்தது.
கொல்கத்தா,
மேற்குவங்க மாநிலம் பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பலிசாக் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலுக்கு பச்சை கொடி காட்டுவதற்காக ரெயில்வே ஊழியா் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது ரெயில் வர உள்ள தண்டவாளத்தில் ஒருவா் விழுந்து கிடந்ததை ரெயில்வே ஊழியா் கவனித்தாா். உடனடியாக வேகமாக ஓடிச்சென்று தண்டவாளத்தில் குதித்து அந்த நபரை தண்டவாளத்திற்கு வெளியே தூக்கி சென்று உட்கார வைத்தாா். அடுத்த சில வினாடிகள் சரக்கு ரெயில் அந்த தண்டவாளத்தை கடந்து சென்றது. இந்த பரபரப்பு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோவை இந்திய ரெயிலவே தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
இதுதொடா்பாக இந்திய ரெயில்வே வெளியிட்ட டுவிட்டா் பதிவில்,
"பணியில் இருந்த ஊழியர்களின் துணிச்சலான உதவியால் ஒரு விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த நபா் படுகாயம் அடையாமல் இருக்க தண்டவாளத்தில் குதித்து அவரை காப்பாற்றி உள்ளாா்.
எச்.சதீஷ் குமார் போன்ற தைரியமான மற்றும் விடாமுயற்சியுள்ள ஊழியர்களைக் கொண்டிருப்பதில் இந்திய ரெயில்வே பெருமை கொள்கிறது. மேலும் அவரது துணிச்சலை பாராட்டுகிறது" இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளது.
ரெயிலில் சிக்க இருந்த நபரை மீட்ட ரெயில்வே ஊழியர் சதீஷ் குமாரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனா்.