காதலி வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில்வே அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
காதலி வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில்வே அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மைசூரு:
காதலி வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில்வே அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரெயில்வே அதிகாரி
தாவணகெரேவை சேர்ந்தவர் கேசவ் (வயது 29). மைசூருவில் ரெயில்வே உதவி என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் மைசூரு சரஸ்வதிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேசவ், தனது காதலியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் காதல் விவகாரத்தை கூறினார். மேலும் தான் ரெயில்வேயில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களது காதலை இளம்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் கேசவுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்தாகவும் தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் கேசவ் மனமுடைந்து காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசாமலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கேசவ் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சரஸ்வதிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கேசவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலியை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொடுக்க மறுத்ததால் கேசவ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.