ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சவுதி இடையே கையெழுத்தாக உள்ள ரெயில், துறைமுக ஒப்பந்தம்


ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சவுதி இடையே கையெழுத்தாக உள்ள ரெயில், துறைமுக ஒப்பந்தம்
x

Image Courtesy : PTI 

இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா இடையே ரெயில் மற்றும் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஜி-20 தொடர்பான பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சவுதி ஆகிய நாடுகளிடையே மாபெரும் ரெயில் மற்றும் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பைனர் கூறுகையில், "இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவுக்கு ஆற்றல், வணிகம் மற்றும் தகவல் பரிமாற்றம் தடையின்றி நடைபெற உதவும் ரெயில் மற்றும் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது" என்றார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா, இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். ரஷியா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், இந்த ஒப்பந்தம் குறித்து ஜி-20 மாநாட்டில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story