பிரதமர் மோடியின் நன்மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ராகுல் வெற்றிபெற மாட்டார் - ஸ்மிருதி இரானி


பிரதமர் மோடியின் நன்மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ராகுல் வெற்றிபெற மாட்டார் - ஸ்மிருதி இரானி
x

பிரதமர் மோடியுடன் மக்கள் இருப்பதால், அவரது நன்மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ராகுல் காந்தி வெற்றிபெற மாட்டார் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை தொடர்ந்து, காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே கடுமையான வார்த்தை மோதல் நடைபெற்றுவருகிறது.

ஸ்மிருதி இரானி பேட்டி

இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தவரும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்நல மேம்பாட்டுத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

'ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே, 'மோடியின் மிகப்பெரிய பலம், அவர் மீதான நன்மதிப்புதான். அதை நான் கிழித்தெறிவேன்' என்று கூறியுள்ளார். ஆனால் பிரதமர் மோடியுடன் மக்கள் இருப்பதால், ராகுல் தனது முயற்சியில் வெற்றிபெற மாட்டார். மோடியின் மிகப்பெரிய பலமே இந்திய மக்கள்தான்.

அரசியல் விரக்தி

ராகுலின் அரசியல் மனநோய் தற்போது முழுமையாக வெளிப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமரை அவர் அவதூறாக பேசினார், குற்றஞ்சாட்டினார். ஆனால் தனது கையெழுத்துடன்கூடிய சொந்த அறிக்கையையே அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தனது அரசியல் விரக்தி காரணமாகவே ராகுல் மோடி மீது நஞ்சைக் கக்குகிறார். அது தற்போது நாட்டுக்கு எதிரானதாக மாறியுள்ளது. ராகுல் இங்கிலாந்து சென்றிருந்தபோதுகூட அவரது ஒரே இலக்கு மோடிதான். ஆனால் மோடியின் ஒரே இலக்கு, நாட்டின் முன்னேற்றம்.

மன்னிப்பு கேட்க மறுக்கிறார்

ஒரு தனிநபரை அல்லாமல், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தையே அவமதித்த குற்றத்துக்காகத்தான் ராகுல் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த சமூகத்திடம் மன்னிப்பு கேட்க அவர் மறுப்பது, அவர்களது குடும்பத்தின் அரசியல் ஆணவத்தை காட்டுகிறது. ஜனாதிபதி பதவிக்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை பா.ஜ.க. முன்மொழிந்தபோதும் அப்படித்தான் தாக்கினார்கள்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு...

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை தொடர்ந்துதான் அவர் அரசு பங்களாவை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது அவருக்கு சொந்தமானது அல்ல. நாட்டு மக்களுக்குச் சொந்தமானது. ராகுல் காந்தியின் வழக்கை கவனித்துவருவதாக கூறியுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் தகுந்த பதிலை அளிக்கும்.'

இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.


Next Story