டெல்லி போக்குவரத்துத்துறை ஊழியர்களுடன் உரையாடிய வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி


டெல்லி போக்குவரத்துத்துறை ஊழியர்களுடன் உரையாடிய வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி
x

File image

டெல்லி போக்குவரத்துத்துறை ஊழியர்களும் தனியார்மயமாக்கலின் தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் டெல்லி போக்குவரத்துத்துறை ஊழியர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,

சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் ஒரு பஸ்சில் பயணித்த சிறந்த அனுபவம் எனக்கு கிடைத்தது மற்றும் டெல்லி போக்குவத்துத்துறை ஊழியர்களுடன் உரையாடிய போது, அவர்களின் அன்றாட பணி மற்றும் பிரச்சினைகள் பற்றி அறிந்தேன்.

தங்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை, நிலையான வருமானம் இல்லை மற்றும் நிரந்தர வேலையும் இல்லை என்று மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறுகிறார்கள். நிலையற்ற வாழ்க்கையால், டிரைவர்கள் மற்றும் நடத்துநர்கள் நிச்சயமற்ற இருளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களாக சம்பளம் இல்லாமல் உள்ளதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற புறக்கணிப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களை போலவே, டெல்லி போக்குவரத்துத்துறை ஊழியர்களும் தனியார்மயமாக்கலின் தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இதுபோன்ற மக்கள்தான் நாட்டையே இயக்குகிறார்கள், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் பயணத்தை எளிதாக்குகிறார்கள். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்புப் பணிக்கு ஈடாக அவர்களுக்கு கிடைப்பதோ அநீதிதான் என்கிறார்கள்.

அவர்களது கோரிக்கையாக ஒருமித்த குரலில் கேட்பது என்னவோ, சம வேலை, சம ஊதியம், அனைவருக்கும் நீதி என்பதே. தொடர்ந்து அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியால் கனத்த இதயத்துடனும் சோகத்துடனும் அவர்கள் மத்திய அரசிடம் கேட்பது, "நாங்கள் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள் என்றால், எங்கள் வேலைகள் மட்டும் ஏன் தற்காலிகமானதாக இருக்கின்றன?". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story