ராகுல்காந்தி 1962-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்கிறார்- மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவை தாக்கும் என்று சொல்லும் ராகுல்காந்தி, 1962-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
ராகுல்காந்தி கருத்து
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து பேசிய வீடியோவை வெளியிட்டார். அதில், போர் என்று வந்தால், சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவை தாக்க வாய்ப்புள்ளது என்றும், தாக்குதலுக்கு எளிதான நிலையில் இந்தியா இருப்பதாகவும் ராகுல்காந்தி கூறியிருந்தார்.
இந்தநிலையில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குரிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி இன்னும் 1962-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போல் தோன்றுகிறது. அவர் திரும்ப திரும்ப இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது என்று சொல்லிக்கொள்கிறேன்.
வலிமையான ராணுவம்
இந்திய ராணுவத்தை திரும்ப திரும்ப இழிவுபடுத்தி, அதன் மனஉறுதியை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதா? அல்லது இந்திய ராணுவம் மீது ராகுல்காந்திக்கு நம்பிக்கை இல்லையா?
பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைக்க இந்தியப்படைகள் துல்லிய தாக்குதல் நடத்தின. டோக்லாமில் சீனாவின் அத்துமீறலக்கு உரிய பதிலடி கொடுத்தன. இந்திய பாதுகாப்பு படைகள் வலிமையாக உள்ளன. எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை பாதுகாக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.
என்ன சாப்பிட்டார்?
அதே சமயத்தில், சீன அதிகாரிகளுடன் ராகுல்காந்தி என்ன சாப்பிட்டார், என்ன குடித்தார், என்ன பேசினார் என்று தெரிந்து கொள்ள மக்கள் இன்னும் ஆர்வமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு ஆட்சியின்போது, படைவீரர்களுக்கு பனிப்பொழிவில் பயன்படுத்தும் காலணிகளோ, உடைகளோ வழங்கப்படவில்லை. குண்டு துளைக்காத உடைகளோ, போர் விமானங்களோ அளிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.