கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு - ராகுல் காந்தி
கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
பாதயாத்திரையின்போது கலந்துரையாடல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கினார். தற்போது அவர் இந்தப் பாதயாத்திரையை கர்நாடக மாநிலத்தில் நடத்தி வருகிறார்.
அங்குள்ள குண்டல்பேட்டில் அவர் தனது பாதயாத்திரையின்போது, கொரோனா வைரஸ் தொற்று பாதித்து, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போனவர்களின் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடினார்.
'நியாயமான இழப்பீடு தருக'
இதையொட்டிய வீடியோவை அவர் டுவிட்டரில் நேற்று பகிர்ந்து கொண்டார். அதனுடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், "பிரதமர் அவர்களே, பா.ஜ.,க. அரசு கொரோனா தொற்றை தவறாக நிர்வகித்ததால், தனது தந்தையை இழந்துள்ள பிரதிக்ஷா கூறுவதை கேளுங்கள். அவர் தனது படிப்பைத் தொடருவதற்கும், தனது குடும்பத்தின் வாழ்வாதார தேவைகளுக்கும் அரசின் ஆதரவைக் கோருகிறார். கொரோனாவால் பலியானோர் குடும்பங்கள், நியாயமான இழப்பீட்டைப் பெறுவதற்கு தகுதி இல்லையா?" என கேட்டுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, கொரோனாவால் பலியானோர் குடும்பத்தினர், தங்களுக்கு அன்பானவர்களின் இறப்புகளைக் கூட ஒப்புக்கொள்ளாத பா.ஜ.க. அரசின் மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். பிரதிக்ஷா என்ற சிறுமியின் வார்த்தைகள், அந்த அரங்கில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. தன் தந்தையின் மரணத்துக்கு பிறகு வேலையில்லாமல் இருக்கும் தன் தாய் படும் பாடுகளை கண்டு வந்ததை வேதனையுடன் கூறினார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.