காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் நாளில் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம்; ராகுல்காந்தி அறிவிப்பு
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் நாளில் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் நாளில் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
ராகுல்காந்தி வீடியோ
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கர்நாடகத்தில் 21 நாட்களில் 557 கிலோ மீட்டர் தூரம் பாரத் ஜூடோ யாத்திரை மேற்கொண்டேன். விவசாயிகள், தொழிலாளர்கள், டிரைவர்கள், பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினேன். கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம். 2-வது யுவநிதி திட்டம்.
5 உத்தரவாதங்கள்
இதன் முலம் வேலையில்லாமல் உள்ள பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000-ம், வேலை இல்லாத டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித்தொகையும், 2½ லட்சம் அரசு வேலையும், 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உத்தரவாதம்.
3-வது உத்தரவாதம், அன்னபாக்ய திட்டம். மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும். 4-வது உத்தரவாதம் கிரக ஜோதி திட்டம். இதன்படி வீட்டுக்கு 200 யுனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 4.5 கோடி மக்கள் பயன் அடைவார்கள்.
5-வது உத்தரவாதம், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் சவுகரியமாக பயணிக்க இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
ஆட்சி அமைந்த முதல் நாளில் அமல்
இந்த 5 திட்டங்களையும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் நாளில், அமல்படுத்தப்படும். கர்நாடகத்தில் இதுவரை ஆட்சி செய்த பா.ஜனதா மக்களை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளது. அந்த கட்சி 40 சதவீத ஊழல் செய்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.