நாட்டை விமர்சித்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி
நாட்டை விமர்சித்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறினார்.
சிம்லா,
சட்டசபைத் தேர்தலையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார்.
அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முந்தைய மக்களவைத் தேர்தலில் தனது கோட்டையான அமேதியில் தோல்வியடைந்தார், ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் எங்கு சென்றாலும், அங்கு நிலைமை என்ன? காங்கிரஸ் தொடர்ந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறது.
நாட்டை விமர்சித்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் மாடுகளை அறுத்து புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களுடன் அவர்கள் யாத்திரை நடத்தினார்கள்.
சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை உங்கள் தலைவர் ஆதரிக்கும் போது, உங்கள் (காங்கிரசார்) ரத்தம் கொதிக்காதா, உங்கள் தலைவர் பசுவைக் கொல்பவர்களின் முதுகில் தட்டும்போது, உங்கள் ரத்தம் கொதிக்காதா? ஒருபுறம் தங்கள் தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்களுக்கும், மறுபுறம், தங்கள் நாட்டை அவமானப்படுத்துபவர்களுக்கும், சிதைந்த இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.