சித்தராமையா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி நாளை கர்நாடகம் வருகிறார்
சித்தராமையா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வருகிறார்.
பெங்களூரு:
கர்நாடகம் வருகிறார்
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் 3-ந் தேதி பிரமாண்ட பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வருகிறார். விமானம் மூலம் அவர் உப்பள்ளி வருகிறார். அன்று இரவு உப்பள்ளியில் தங்கும் அவர் மறுநாள் சித்தராமையா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசியல் நடவடிக்கைகள்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3-ந் தேதி (நாளை) தாவணகெரேவுக்கு வருகிறார். அவர் அங்கு நடைபெறும் சித்தராமையா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறார். 2-ந் தேதி மாலை எங்கள் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த கூட்டம் உப்பள்ளியில் நடக்கிறது. அதிலும் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். அந்த மாநாட்டை முடித்து கொண்டு அவர் விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்திற்கு வந்து மடாதிபதியிடம் ஆசி பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி கர்நாகத்தில் பாரத் ஜோடோ பெயரில் பாதயாத்திரை நடத்துகிறார். கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அவர் பாதயாத்திரை மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார். மைசூரு, மண்டியா, நாகமங்களா, மேல்கோட்டை வழியாக பல்லாரிக்கு செல்கிறார். அவர் தங்கும் இடங்களில் கட்சி கூட்டத்தில் பேசுவார்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.