குதுப்மினார் ஒரு நினைவுச்சின்னம், வழிபாட்டுத்தலம் அல்ல - டெல்லி ஐகோர்ட்டில் இந்திய தொல்பொருள் துறை தகவல்


குதுப்மினார் ஒரு நினைவுச்சின்னம், வழிபாட்டுத்தலம் அல்ல - டெல்லி ஐகோர்ட்டில்  இந்திய தொல்பொருள் துறை தகவல்
x
தினத்தந்தி 24 May 2022 12:40 PM IST (Updated: 24 May 2022 12:56 PM IST)
t-max-icont-min-icon

குதுப்மினார் ஒரு நினைவுச்சின்னம், வழிபாட்டுத்தலம் அல்ல என டெல்லி ஐகோர்ட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

டெல்லியின் மெஹரோலி பகுதியில் உள்ள குதுப்மினார் கோபுரம் புராதான சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தரம்வீர் சர்மா புதிய சர்ச்சையை கிளப்பினார். அதாவது டெல்லி குதுப்மினார் கோபுரம் குத்புதீன் ஐபக் கட்டவில்லை.

இந்த கோபுரத்துக்கும் அருகே உள்ள மசூதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக இந்த கோபுரத்தை இந்து மன்னரான விக்ரமாதித்யா கட்டினார். சூரியனின் நகர்வை கண்டறியும் வகையில் 25 அங்குலம் சாய்த்து இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார். இது பெரும் விவாதப்பொருளானது.

குதுப்மினார், முன்பு விஷ்ணு ஸ்தம்பமாக இருந்ததாக சில இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வளாகத்தில் உள்ள மசூதிக்குள் இந்து, ஜைன மத கடவுள் சிலைகள் இருப்பதாகவும், அவற்றை வெளியே எடுத்து வந்து வழிபாடு செய்ய அனுவமதி வழங்க கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ஜின்வாபி மசூதி மற்றும் மதுரா கோயில் தொடர்பான சட்டப் போராட்டத்தின் மத்தியில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) இன்று டெல்லி நீதிமன்றத்தில் குதுப்மினார் "வழிபாட்டுத் தலம் அல்ல" என்றும், தற்போதுள்ள கட்டமைப்பை மாற்றுவது அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கூறும் போது குதுப்மினார் ஒரு நினைவுச்சின்னம் என்றும், அத்தகைய கட்டமைப்பின் மீது அடிப்படை உரிமைகளை யாரும் கோர முடியாது. இந்த இடத்தில் வழிபாடு நடத்த எந்த உரிமையும் வழங்க முடியாது என கூறியது.


Next Story