நான் கமிஷன் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்; பா.ஜனதாவினருக்கு, ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. சவால்


நான் கமிஷன் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்; பா.ஜனதாவினருக்கு, ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. சவால்
x

கோலார் தங்கவயலில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டபோது ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் வாங்கியதை பா.ஜனதாவினர் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டபோது ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் வாங்கியதை பா.ஜனதாவினர் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

குடியரசு தின விழா

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை நகரசபை மைதானத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கோலார் தங்கவயல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி, நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரத்திற்கு பின் நாட்டிற்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. அதன்பேரில் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார். இன்று நாட்டு மக்கள் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை மதித்து நடந்தாலே இந்திய நாடு வல்லரசாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலில் இருந்து விலக தயார்

அவரை தொடர்ந்து ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசுகையில் கூறியதாவது:-

கோலார் தங்கவயல் தொகுதியில் எனது சக்தியை மீறி மந்திரிகளை அணுகி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்துள்ளேன். அதை கோலார் தங்கவயல் மக்கள் நன்கு அறிவார்கள். நான் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை கண்டு எதிர்க்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். எனவே தான் என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், வளர்ச்சி பணிகள் மேற்கொண்டபோது நான் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெற்றதாக குற்றம்சாட்டுகிறார்கள். கமிஷன் வாங்கியதை நிரூபித்தால் நான் அரசியில் இருந்து விலகத்தயார். அடுத்த சட்டசபை தேர்தலில் நான் வெற்றி பெற்றால் கோலார் தங்கவயல் தொகுதியை வல்லரசு தொகுதியாக மாற்றுவேன். அதுவே எனது குறிக்கோள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story